தமிழ் விடு தூது - மதுரை சொக்கநாதர் [230-245]

 

தமிழ் விடு தூது
[230-245]



230. 
கண்டுகளி கூர்ந்து கசிந்துகசிந் துள்ளுருகித் 
தொண்டுசெய்து தாண்முடிமேற் சூடியே-மண்டும்

231. 
உடுக்குலந்தங் கோக்குலமென் றுற்றறிந்தா லென்ன 
அடுக்கிலங்கு தீபமெதி ராகக் - கடுத்திடேல்

232. 
வெங்கதிருண்டுன்குலத்து வெண்மதியுண்டென்னல்போல் 
தங்கவா ரத்தீபந் தாமசையத் - துங்கவிடை

233. 
ஏங்குமொரு மீனுயர்த்தி ளெங்கிருப்பே னென்பதுபோல் 
ஆங்கிடப நீப மழன்றாட- நீங்கா

234. 
தருடா மருகத்துரு வானார்க் குவந்தே 
புருடா ம்ருகத்தீபம் போற்ற - மருவார்

235.
வகுகுலத்தார் பானு வரனடுக்குற் றென்ன 
அருகுலவுந் தட்ட தசைய -இருசுடர்க்கும்

236. 
சொக்கருனைத் தாளே சுடரென்று காட்டுதல்போல் 
அக்கரா லத்தியொளி யாய்லிளங்கத்- தக்கவளோ

237. 
டெற்கும் பயந்தொளித்தா ரென்றுகங்கைதேடுதல்போற் 
பொற்கும்ப தீபமெதிர் போய்வளையச்- சொற்குருகும்

238. 
அற்பூரத் தொண்டர்க் கருண்முத்தியீதெனல்போற் 
கற்பூரத் தட்டிற் கனல்வாய்ப்பப் - பொற்பாக

239. 
நங்குலத்தும் வந்துதித்தார் நாதரென்று பானுமகிழ்ந் 
தங்குறல்போற் கண்ணாடி யங்கணுற -இங்கரசர்

240. 
எங்குலத்தாராயினா ரென்றுபிறை தோற்றுதல்போல் 
துங்கமுடி மேற்குடைவெண் சோதிவிடப் - பொங்கியெழும்

241. 
முத்துக்கடல் வெண்டிரைகண் முன்னேமா மிக்காக 
வந்தனபோல் வெண்சா மரையிரட்ட - விந்தைசெயும்

242. 
ஆடரவச் சித்தரிவ ராதலினா லாலவட்டம் 
நீடரவம் போலவெதிர் நின்றாட - நாடகலா

243. 
வாலநறுந் தென்றனம் மன்னரென்று காண்பதுபோற் 
கோல விசிறி குளிர்ந்தணுகக் - காலைத்

244. 
திருவனந்தன் முன்னாகச் சேவிக்குங் காலத் 
துருவனத்த தேவ ருடனே - மருவியெதிர்

245. 
போற்றுவாய் நீயும் புரோகிதரை முன்னனுப்பித் 
தோற்றரவு செய்து துதித்ததற்பின் - ஆற்றல்


பொருள்:

நெருங்கிய விண்மீன் கூட்டங்கள் தம் தலைமைக் குலத்தைச் சார்ந்த தென்று அறிந்து வந்து நின்றனபோல அடுக்கடுக்காக விளங்கும் விளக்குகள் எதிரே தோன்றவும், என்னை வெறாதே செங்கதிரும் உண்டு உன் குலத்து வெண்ணிலவு முண்டு என்று கூறுவது போலத் தங்கவிளக்கும் ஆரவிளக்கும் அசைந்து எரியவும், ஒப்பற்ற மீனக்கொடியையுயர்த்தின் ஏங்கும்யா னெங்கிருப் பேன், என்று உயர்ந்த இடபக்கொடி யுரைப்பதுபோல் ஆங்கு இடபவிளக்குச் சிவந்து தோன்றி அசையவும், நீங்காத அருள்பரவிய பன்றி யுருவான அவ்விறைவனுக்கு மகிழ்ச்சி யுடன் புருடா மிருக வடிவுடைய விளக்கு நின்றுபோற்ற வும், பகைவராக வழிவழி வந்த சூரிய குலத்தார் வருவது கண்டு நடுங்குவதுபோல அருகில் உள்ள தட்டுக்கள் அசைய வும்,கதிர்,மதி என்ற இருசுடர்களுக்கும் முன்னே உன்னையே சிறந்த சுடர் என்று சொக்கர் காட்டுவது போல அக்கராலத்தி மிகவும் ஒளியுடன் விளங்கவும், தமக்குத் தக்கவளாகிய உமாதேவியாருடன் எனக்கும் அஞ்சியொளித்துக் கொண்டார் போலும் என்று கங்கை தேடுவதுபோல அழகிய கும்பத்திலேற்றிய விளக்கு எதிர் சென்று சூழவும், தமிழ்ச் சொல்லுக்கு மன முருகும் அன்பு மிகுந்த அடியார்கட்கு அளிக்கும் முத்தி இது தான் என்று காட்டுவதுபோலக் கற்பூரத் தட்டில் அழல் எழுந்து எரியவும், அழகாக நம்முடைய குலத்திலும் வந்து தோன்றினார் சிவபெருமான் என்று சூரியன் மகிழ்ந்து அங்கு வந்ததுபோலக் கண்ணாடி யவ்விடத்திற் பொருந்த வும், இங்கு மன்னர் எமது குலத்தவராயினார் என்று பிறை யானது காட்டுவதுபோல டயர்ந்த முடிமேல் வெண்குடை யொளிவிட்டு விளங்கவும் முந்திப் பெருகி எழுகின்ற கடலின் வெள்ளிய திரைகள் முற்காலத்தில் மாமிக்காக வந்தன போலத் தோன்ற வெண்சாமரை வீசவும், விளையாடல் செய்யும் பாம்பாட்டுஞ் சித்தர் இவர் என்று நீண்ட பாம்பு கள் படமெடுத் தாடுவதுபோல ஆலவட்டம் எதிர் நின்று காற்றுவீசவும், நாட்டைவிட்டு நீங்காத இளமையான நல்ல தென்றற் காற்றானது நம் மன்னர் இவர் என்று கருதி வந்து காண்பதுபோல அழகிய விசிறிகள் காற்றினை வீசிக் குளிர்ந்து நெருங்கவும் விடியலில் திருவனந்தல் முதலாக அடியார்கள் வந்து வழிபாடு செய்யுங் காலத்தில் பல வடிவுள்ள தேவர் பலருடனே கூடித் திருமுன்நின்று நீயும் போற்றுவாய்.

- மதுரை சொக்கநாதர்

Comments