- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது
[248-256]
248.
சீபாத மெண்ணாத தீயவினைப் பாவிசெய்த
மாபாத கந்தீர்த்த மாமருந்தைத் - தீபமணிப்
249.
பைந்நாகஞ் சூழ்மதுரைப் பாண்டியனே பாரமணிக்
கைந்நாகஞ் சூழ்கோயிற் கண்மணியே- மன்னாக
250.
மைக்கட் கரும்பை மருவிப் பிரியாத
முக்கட் கனியே முழுமுதலே - மிக்கபுனற்
251.
கங்கா நதிக்கிறையே கன்னித் துறைக்கரசே
சிங்கா தனத்துரையே செல்வமே - எங்கோவே
252.
நாடவிளை யாடிவந்த நற்பாவை போலடியார்
கூடவிளை யாடிவந்த கோமானே - தேடரிய
253.
சிந்தைமகிழ்ந் தன்புடையார் தேடியநா ளோடியெதிர்
வந்தவிளை யாட்டினிமேல் வாராதோ- வந்தருளால்
254.
பாவும் புகழ்சேர் பழிக்கஞ்சி யென்றுலகில்
மேவும் பெயரினிமேல் வேண்டாவோ - ஆவலினால்
255.
புக்குவந்தார் தம்மேற் பொடிபோட் டுளமயக்கிற்
சொக்கலிங்க மென்றெவருஞ் சொல்லாரோ - இக்கணைத்த
256.
அங்கைவே டானே யரசாள வுஞ்சிறிய
மங்கைதனைக் கோட்டிகொளல் வல்லமையோ -கங்கையெலாம்
பொருள்:
விளக்குப்போன்ற மணிகளையுடைய படங்கொண்ட பாம்பு சுற்றி யெல்லைகாட்டிய மதுரையை யாளும் பாண்டியனே! அழகிய துதிக்கையுடைய யானைகள் சுமந்த விமானத்துள்ளுறையும் கண்மணிபோன்றவனே ! அரசனாக வந்து மைதோய்ந்த கண்களையுடைய கரும்பு போன்ற தடாதகைப் பிராட்டியாரைக் கூடியென்றும் பிரியாது வாழும் முக்கண்ணுடைய கனிபோன்றவனே! உலக முழுதுக்கும் ஒரு முதல்வனே! மிகுந்த நீர்ப்பெருக் குடைய கங்கை நதிக்குத் தலைவனே! கன்னியாகுமரித் துறைக்கு மன்னனே ! அரியணைமேல் அமர்ந்திருக்கும் பாண்டி நாட்டரசனே! அடியார்க்கு வாய்த்த செல்வம் போன்றவனே !எமது கடவுளே !தொண்டர்கள் கருத் தினால் எண்ணியபோது விளையாடி வரும் கண்ணாடிப்பாவை போல அவர்கள் உடன்கூடி விளையாடி வந்த தெய்வமே! தேடுவதற்கு அருமையான அன்பர்கள் தேடிய நாளில் மனமகிழ்ந்து அவர்கள் முன்னே யோடிவந்த திருவிளை யாடல் இனிமேல் காட்ட இயலாதோ? திருவருளோடு முன்வந்து பழிக்கஞ்சியவர் என்று உலகத்திற் பரவும் புகழ் சேர்ந்த பொருத்தமான பெயரினிமேற் பெறவேண்டாவோ? ஆசையுடன் காண்பதற்கு வந்தவர்மேற் பொடிபோட்டு மனத்தை மயக்கினார் சொக்கலிங்கமென்று எவருஞ் சொல்லமாட்டாரோ ? கரும்பினை வில்லாகக்கொண்ட அழகிய கைகளையுடைய மன்மதன் தானே வந்து அரசாளு மாறும் இளமையான ஒரு மங்கையைக் காமமயக்கங் கொள்ளுமாறுஞ் செய்வது வலிமையாகுமோ?
Comments
Post a Comment