தமிழ் விடு தூது - மதுரை சொக்கநாதர் [256-264]

 

தமிழ் விடு தூது
[256-264]




256. 
.........................................................................கங்கையெலாம்

257.
நல்லமைக்கண் ணூடுவர நல்குதியே னங்கையெல்லாம் 
வல்லசித்த ரென் றழைக்க மாட்டாளே - நல்லவர்போல்

258. 
மைக்குவளைக் கண்ணி வளைகவர்ந்து மங்கையர்தங் 
கைக்குவளை விற்கக் கணக்குண்டோ - திக்குவளை

259. 
தோட்டாரும் வேம்பாய்த் தொடர்ந்து தொடர்ந் தேயொருதார் 
கேட்டாரும் வேம்பாகக் கேட்டோமே - நாட்டமுற

260. 
வேளையெரித் தாய்க்கியல்போ மின்னார் கலைகவர்தல் 
காளை யிடையிருந்து கற்றதோ-மீளாது

261. 
சென் றிலகு நாரையன் று சென்றசிவ லோகத்தே 
இன்றெனையங் கெய்தவிட லாகாதோ - அன்றியழற்

262. 
குன்றே விருத்த குமார ரிளம்பாலர் 
என்றேயோர் பெண்வீட்டிருக்கலாஞ் - சென்றொருநாள்

263. 
பொன்னனையாள் வீடும் புகுந்திருக்க லாமெனினென் 
பொன்னனையாள் விடும் பொருந்தாதோ - என்னுமொழி

264. 
எல்லாந் திருச்செவியி லேறும் படியுரைக்க 
வல்லாயுன் போலெவர்க்கு வாய்க்குமே - நல்லாள்


பொருள்:

கங்கை யாற்று நீரெல்லாம் நல்ல மை யணிந்த கண்களின் நடுவே வருமாறு அருள் புரிந்தால் இந் நங்கை எல்லாம் வல்ல சித்தர் என்றழைக்க மாட்டாளே! நல்லவர் போல் நடித்து மையணிந்த நீலமலர் போலும் கண்ணியின் வளையலைக் கவர்ந்து சென்று பின் மங்கையர் தம் செங்கைக்குரிய வளையலாகக் கொண்டு போய் விற்க முறையுண்டோ! எட்டுத் திசையாக வளைந்த தோளி லணிந்த மாலையும் வேப்ப மாலையாகி அம்மாலையைத் தொடர்ந்து தொடர்ந்து கேட்டவர்களும் வேம்புபோலாகி வெறுக்கும்படி கேட்டோமே! கண்ணிற் பொருந்துமாறு காமனை யெரித்த வுனக்கு இது தகுமோ? மங்கையர் தம் உடையைக் கவருந் தொழில் உனக்கு விடையாய் வந்த திருமாலிடத்திற் கற்றதோ ! மீண்டு வராமல் சென்றுறைந்த நாரை அந்நாளிற் சென்றடைந்த சிவலோகத்தில் இந்நாள் இம்மங்கையை விடலாகாதோ? அன்றியும் தீமலையாய் நின்றவனே ! விருத்தர் குமாரர் இளமையான பாலகர் என்று வடிவமாறி ஒரு பெண்ணின் மனையில் தனியே இருந் தாய் முன் ஒரு நாளிற் பொன்னனையாள் மனையிற் புகுந்து இருந்தனை? தனியே பெண்ணிருக்கு மனையிற் புகுந் திருக்கலாம் எனின் எனக்குரிய பொன் போன்றவள் மனைக்கு வருவது பொருந்தாதோ? பொருந்தும் என்னும் சொற்களை யெல்லாம் திருச்செவியில் ஏறும்படி கூறுவ தற்கு நீதான் வல்லமை யுடையாய். உன்போல எடுத் துரைக்கும் சொல்லாற்றல் எவர்க்கு வாய்க்கும்! ஒருவர்க் கும் வாய்க்காது.

- மதுரை சொக்கநாதர்

Comments