தமிழ் விடு தூது
[264-268]
264.
...................................................நல்லாள்
265.
கருணைவிழி யாளங் கயற்கண்ணி தன்னோ
டருள்புரிய வாழ்ந்திருக்கு மையர் - திருமதுரை
266.
தானே சிவராச தானியென்று வீற்றிருந்தால்
தேனே நம் பாக்கியத்தின் செய்தியே - ஆனமையால்
267.
அந்தரலோ கத்தின்மே லான திரு வாலவாய்ச்
சுந்தர மீனவனின் சொற்படியே-வந்து
268.
துறவாதே சேர்ந்து சுகாநந்த நல்க
மறவாதே தூதுசொல்லி வா.
பொருள்:
நல்லவளும் திருவருள் விழியுடையவளும் ஆகிய அங்கயற்கண்ணியம்மையுடன் அடியார் கட்குத் திருவருள் செய்யும் பொருட்டு வாழ்ந்திருக்கும் தலைவர் சிறந்த மதுரை நகரமே சிவராசதானியென்று கருதி வீற்றிருந்தால் அது நாம் புரிந்த புண்ணியத்தின் செயலேயாகும். ஆதலால் பொன்னுலகத்தினும் மேலான மகிமையுடைய திருவாலவாயிலுறையும் சுந்தர பாண்டியன் நினது சொற்படியே வந்து எனைவிட்டுப் பிரியாதிருந்து கூடிக் கலந்து இன்பப் பேரானந்தத்தை நல்குமாறு என்னை மறவாமல் எனக்குரிய தூது சொல்லி மீண்டு வருக என்றாள்.
Comments
Post a Comment