தமிழ் விடு தூது - மதுரை சொக்கநாதர் [97-101]

 

தமிழ் விடு தூது
[97-101]




97.
கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்கவதற்குத் தகவென்ற - சொற்குள்ளே

98. 
எல்லார்க்கும் புத்தி யியம்பிக் கரையேற்ற 
வல்லா யுனக்குரைக்க வல்லேனோ - சொல்லியவுன்

99. 
ஈரடிக்குள் ளேயுலக மெல்லா மடங்குமெனின 
நேரடிக்கு வேறே நிலனுண்டோ -ஓரடிக்கோர்

100. 
ஆயிரம் பொன்னிறைக்கு மையரை வீதியிலே 
போயிரந்து தூதுசொல்லப் போக்கினோ- யாயிருந்தும்

101. 
மாண்பாயோர் தூதுசொல்லி வாவென்பேனென்வருத்தம் 
காண்பாயென் பெண்மதிதீ காணாதே

பொருள்:


கற்க என்ற குறட்பாவின் சொற்களால் எல்லார்க்கும் அறிவுரை இயம்பிக் கரையேற்றவல்லை நீ; உனக்கு அறிவுரை கூற வல்லேனோ நான். சொல்லியவுன் திருக்குறளாகிய இரண்டடிக்குள்ளே உலகம் எல்லாம் அடங்குமெனின் நேரடியாகிய நாலடிக்கு வேறு நிலம் உளதோ? இல்லை. ஓரடிக்கு ஆயிரம் பொன் சிதறிய ஐயராகிய சிவபெருமானைத் தெருவிற் சென்று பரவைபால் வேண்டித் தூது சொல்லுமாறு போக்கினை. அவ்வா றிருந்தும் பெருமையாக ஒரு தூது சொல்லிவா என்று நான் கூறுகின்றேன். இது என் பெண்மதி; இது குறித்து ஆராயாதே. என் காமநோய் வருத்தத்தை மட்டும் குறித்து ஆய்ந்துபார்.

- மதுரை சொக்கநாதர்

Comments